காதல்….

February 11th, 2011

காதல்…. ஒரு மென்மையான, மிக  மென்மையான உணர்வு.  அதை  உணர்வது பிரத்யேகமான ஒன்று.              காதலிப்பதை காட்டிலும்  காதலிக்கப்படுவது எல்லோருக்கும் பிடித்தமானது. நம்மை ஆதி அந்தமாக நேசிக்க ஒருவர் இருக்கிறார், என்ற நினைவே நமக்குள் மகிழ்ச்சி, உற்சாகம், தன்னம்பிக்கை, பெருமிதம் என்ற நேர்வழி சிந்தனையை உருவாக்கி நம்மை சாதிக்க வைக்கும்.

காதல் மெல்லிய பூங்காற்று. நம் உள்ளே எப்போது வந்தது என்று நமக்கே தெரியாது.  காதல் நம்முள் நுழையும்போது, உலகத்தில் உள்ள அனைத்தும் நமக்குப் பிடிக்கும்.  குத்துப் பாட்டுக் கூட இனிமையாக ஒலிக்கும்.  மாலைப் பொழுது, மழைக்காலம், சாரல் காற்று, காய்ந்த சருகுகளின் ஊடே நடப்பது, என்று அனைத்தையும் ரசிக்க வைக்கும்.

காதலிக்கும் தருணங்கள் மிக இனிமையானவை.  மணிக்கணக்காய் பேசும் தொலைபேசி அழைப்புக்கள், மன உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் காதல் கடிதங்கள், கிறங்க வைக்கும் குறுஞ் செய்திகள், மின்னஞ்சல்கள், வாழ்த்து அட்டைகள், சின்ன சின்னதாய் அழகிய பரிசுப் பொருட்கள், மாலை நேர சந்திப்புகள், பட்டும் படாமலும் அருகாமையில் பயணிக்க நேரும் தருணங்கள், கண நேர சந்திப்புகளிலும்  காவியம் பேசும் பார்வைகள், எதிர்பாராது நிகழும் ஸ்பரிசங்கள் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்க வைக்கும்.

காதல் மொட்டாக மலர்ந்து, திருமண பந்தத்தில் மணம் வீசும் மலராகி, வருடங்கள் ஆன பின்,  சந்தன மாலையாக,  என்றும் உதிராது நிரந்தரமாக இருக்க வேண்டும். அந்த காதல்தான் உண்மையானது.

‘Rab Ne Bana di Jodi’ என்ற hindi படத்தில் ஒரு வசனம் வரும். எனக்கு மிகவும் பிடித்தது.  Hero,  Heroine இடம் கேட்பதாக வரும் வசனம்.

‘ தன்னை விரும்பும் ஆணிடம் பெண் என்ன எதிர்பார்க்கிறாள்?” —  Hero

“இந்த உலகத்திலேயே தன் மீது மட்டும்தான் அதிக அளவில் காதல் கொண்டவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் — Heroine

காதல் பெண்களிடம் என்றும் உண்மையாக உயிருடன் உதிரத்துடன் கலந்திருக்கிறது.  ஆண்களிடம் அது ஆத்மார்ததமாக இருப்பது மிகவும் அரிதாக இருக்கிறது.

காதலில் பெண்கள், உள்ளத்திற்கே முதலிடம் தருகிறார்கள். தன்னை மனதார விரும்பும் ஆண், உருவத்தினால் அல்லது தகுதியால் குறைந்திருந்தாலும், உறவுகளை எதிர்த்தும் மன உறுதியோடு உறுதுணையாகிறாள்.

ஆண்கள், அழகிற்கே முக்கியத்துவம் தருகின்றனர். காதலிக்கும் பொழுது இருந்த ஆத்மார்த்தமான நெருக்கம், கல்யாணமாகி இரு குழந்தைகள் பிறந்ததும், குறைந்து விடுகிறது.

ஆண்கள் காதலை பொழுதுபோக்காக நினைக்கக்  கூடாது. உயிராக நினைக்கவேண்டும்.  அப்போதுதான் பொது இடங்களில், பேருந்துகளில், அலுவலகங்களில், இணைய தளங்களில், பெண்களை உண்மையாக மதிக்கத் தோன்றும். கள்ளக் காதல்கள் மறையும்.

காதலர் தினத்தில் காதலை உண்மையாக்குங்கள்.

கல்யாணமான ஆண்கள், காதலர் தினத்தை மனைவியர் தினமாக்கினால், நீங்கள் தான் என்றும் எங்கள் ஹீரோ.

காதல் வாழ்க.

Subscribe to read posts on email

Enter your email address:

Delivered by FeedBurner