என் அருமை அம்மா
Friday, January 28th, 2011” யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா”
டிசம்பர் 31, 2010 காலண்டரில் எனக்கு பிடிக்காத நாள். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
விடிந்தால் ஜனவரி 1, 2011, புது வருடத்தின் முதல் நாள். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31ம் தேதி இரவு முழுவதும் தொலைக்காட்சிப் படங்கள், தொலைப்பேசி வாழ்த்துக்கள் என்று வீடே கலகலப்பாக இருக்கும். புது வருடத்திற்கு என்ன கோலம் போடலாம், என்ன ஸ்வீட் செய்யலாம், விசேஷமாக என்ன சமைக்கலாம், என்ற எண்ணங்கள் எதுவுமே தோன்றாமல் என் மனம் நிச்சலனமாய் இருந்தது. ஆம், அந்த இரவு எங்கள் தொலைக்காட்சி மவுனிக்க, தெருக்களின் பட்டாசு சத்தம் கூட சோகத்தின் பின்னணியாக ஒலித்தது.
மூன்று மாதங்களாய் உடல் நலம் குன்றி மருத்துவ மனை யில் இருந்த என் அருமை அம்மா, இருபத்தி ஒராம் நூற்றாண்டின் மருத்துவ வளர்ச்சிக்கும், பல சிறப்பு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கும் பலனின்றி, தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களை சுவாசித்து கொண்டிருந்தார்.
சிறு வயது முதல் பாலூட்டி, தூக்கம் விழித்து கண்ணும் கருத்து மாய் வளர்த்து, படிக்கும் காலங்களில் நேரத்திற்கு அமுதூட்டி, நாங்கள் நோய்வாய்பட்டால் மருந்துடன் பாசத்தையும் ஒரு படி அதிகமாய் கொடுத்து குணமாக்கி, நாங்கள் கவலையுறும்போது கனிவான மொழி பேசி , சந்தோஷப்படும்போது எங்களுடன் சேர்ந்து குதூகலித்து முப்பொழுதும் எங்கள் நலனையே சிந்திக்கும் ஒரு ஜீவனை இழந்து கொண்டிருந்தோம்.
எங்கள் வீட்டு அன்பின் அமுதசுரபி பிரிந்து செல்வதை தடுக்க முடியாத இயலாமையில் கடவுள் மேல் முதன் முதலாய் கோவப்பட்டேன். எதற்காக இறப்பு என்ற ஒன்றை நம் மேல் திணித்தார்? நல்லவர்களாய் வாழாதவர்களுக்கு மட்டும் இறப்பு என்றிருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும். உலகத்தில் எங்கும் சுபிக்ஷம் மட்டுமே நிறைந்திருக்கும்.
வருடத்தின் முதல் தேதியை பிள்ளைகள் சந்தோஷமாக கொண்டாடட்டும் என்று தன் சுவாசத்தின் இறுதி மூச்சில் கூட எங்களின் நலம் நினைத்தரோ, அம்மா. ஜனவரி 2ம் தேதி காலை மூன்று மணிக்கு சோகத்தின் உச்ச கட்டமாய் அம்மா எங்களைப் பிரிந்தார்.
என் அம்மா சிறந்த குணவதி. அன்பு ததும்பும் சாந்தமான முகத்திற்கு பொருத்தமாக என் தாத்தா அம்மாவிற்கு ‘சாந்தா’ என்று பெயர் சூட்டியிருந்தார். அம்மா மிக்க பொறுமை நிறைந்தவர். எங்களை சிறு வயது முதல் பாசத்தால் மட்டுமே நல் வழிப் படு த்தியவர். சிறு கடுஞ்சொல் கூட அவரது வாயில் உச்சரிக்கப்பட்டு கேட்டதில்லை நாங்கள். வீட்டு வேலைகள் அனைத்தையும் முகம் சிறிது கூட கோணாமல் செய்து முடிக்கும் அவரது திறமையும், வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள், எந்த நேரத்தில் வந்தாலும் வரவேற்று உபசரிக்கும் நற்குணமும், அப்பாவின் உள்ளமறிந்து உறுதுணையாக நடந்த நேர்த்தியும், பிள்ளைகளுக்கு பிடித்த உணவை பார்த்து பார்த்து சமைக்கும் பாசமும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூட பார்த்து வியக்கும் நற்குணமும் அமைந்தவர், என் அம்மா.
தாத்தா/பாட்டிக்கு அன்பானதொரு மகளாய், அப்பாவிற்கு நல்ல மனைவியாய், எங்களுக்கு பாசமிகு அம்மாவாய், மாமாவுக்கு பாசமான தங்கையாய், மாமிக்கு வெகுளியான நாத்தனாராய், சித்திகளுக்கு அன்பான அக்காளாய், பாட்டிக்கு பிடித்தமான மாற்றுப்பெண்ணாய், அத்தைகளுக்கு அரவணைக்கும் மன்னியாய், அத்திம்பேர்களுக்கும் மதிப்பிற்குரிய மன்னியாய், மாப்பிள்ளைக்கும் மருமகள்களுக்கும் பாசமுள்ள குறை சொல்லாத மாமியாராய், பேரன் பேத்திகளுக்கு கொஞ்சி விளையாடும் பாட்டியாய், எல்லா உறவுகளிலும் நற்பெயர் பெற்றவர் என் அம்மா.
குடும்பத்தில் மட்டுமல்லாது, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூட மறைவாகவும் போற்றும் குணம் மிக்கவர்.
அம்மா,
பூக்களிலே நீ இதழ் விரிந்த தாமரை
கனிகளிலே நீ முத்தான மாதுளம்
மரங்களிலே விழுதுகள் நிறைந்த ஆலமரம்
இசைக்கருவிகளில் நீ இன்றியமையாத தம்புரா
காலங்களில் நீ உன்னதமான சூர்யோதயம்
பாடல்களில் நீ பாசமான தாலாட்டு
காற்றினிலே நீ இதமான தென்றல்
என்றும் எங்கள் இதயத்தின் துடிப்பு நீ.
அப்பா/அம்மா திருமணம் 1961ம் ஆண்டு நிகழ்ந்து 49 வருடங்கள் ஆதர்ச தம்பதியராக இருந்தனர். தன் மனதில் உள்ள பாசத்தை வெளிப் படுத்தி அப்பா எழுதிய கடிதம் எங்கள் நெஞ்சத்தை உருக்குவதாக இருந்தது. அந்த கடிதம் அம்மாவிற்கு அஞ்சலியாக என் வலைதளத்தில் அப்பாவுடைய கையெழுத்திலேயே இணைப்பதில் மிக்க பெருமை கொள்கிறேன்.
அம்மா உன் கண்களை இரு பார்வையில்லாதவர்களுக்கு தானம் செய்ததால், இன்னும் எங்களுடன் தான் இருக்கிறாய் அம்மா, உன் கனிவான பார்வை எங்களை நினைக்குமா அம்மா? அடுத்த பிறவி என்று இருக்குமாயின் எந்த உயிராகவாவது எங்களுடன் சேர்ந்துவிடுவாயா அம்மா? உன்னை அன்புடன் எதிர்பார்க்கிறேன்.
