ஆகாயத்திற்கு கீழே…..
Tuesday, June 8th, 2010இந்த லீவுக்கு நிறைய இடங்களுக்கு சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்கள். நினைத்த மாத்திரத்தில் தினமும் செல்லக் கூடிய, பணம் செலவாகாத, விடுப்பு தேவைப்படாத, இயற்கை எழில் கூடிய, சிலுசிலுவென்று காற்று வீசும், நிலவும் நட்சத்திரங்களும் அலங்கரிக்கும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை நகரத்தின் அழகைக் காட்டும் ஒரு இடத்தைப் பார்க்க விருப்பமா?
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்கள் வீட்டு வாசற் கதவை திறந்து வெளியே வந்து மின் தூக்கியில் கடைசி தளத்திற்கு சென்று, அதிலிருந்து சில படிக்கட்டுக்களில் ஏறி, பெரும்பான்மையான வீடுகளில் பாதுகாப்பு கருதி பூட்டி வைத்திருக்கும் பூட்டையும் கதவையும் திறந்தால் நம் கண் முன்னே விரியும் மொட்டை மாடி. சிறிது காலமாய் நாம் மறந்திருக்கும், நினைவிருந்தாலும் செல்வதற்கு நேரமில்லை என்று கவனிக்காமல் விட்டிருக்கும் நம் வீட்டு மொட்டை மாடி.
அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகம் இல்லாத எங்கள் இளம் பிராயத்தில் என் போன்றவர்களின் கனவுகளை வளர்த்த இடம் அது. எங்கள் வீட்டு மொட்டை மாடி மிகவும் அழகானது. சதுரமாக சுற்றிலும் பசுமையான மரங்களால் சூழப்பட்டு இருக்கும். வீட்டின் உரிமையாளர் மொட்டை மாடியின் ஒரு பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்றொரு பகுதியில் இரண்டு போர்ஷன் கட்டி காசு பார்த்திருந்தார். அதன் மதில் சுவரின் ஒரு பக்கம் சுலபமாக ஏறி அந்த பக்கம் இறங்கலாம். அது எங்கள் வீட்டின் நீளமான சமையலறையின் மேல் பகுதி. சமையலறைக்கும், அதை ஒட்டிய தாழ்வார அறைக்கும் தளமில்லாமல் ஓடு வேயப்பட்டு அதன் மேல் சிமெண்ட் பூசப்பட்டிருக்கும். மேற்புறம் வெளிச்சத்திற்காக கண்ணாடி பொருத்தப் பட்டிருக்கும். அதில் கண் வைத்து இரு பக்கமும் கைகளால் மறைத்துக் கொண்டு கீழே பார்த்தால் அம்மாவும், பாட்டியும் நடமாடுவது தெரியும். அந்த இடம் நிழலாகவும் சற்றே சரிவாகவும் இருந்ததால் படிப்பதற்கு தோதாக இருந்தது. யாருடைய தொந்தரவும் இருக்காது. அதிகாலையில் இளம் காற்று இதமாக வீச, தூரத்து கோவிலின் சுப்ரபாதம் பிண்ணணியாக இசைக்க, காற்றில் மரங்கள் அசையும் ஒலியும், பறவைகளின் சம்பாஷணையும் மட்டுமே சப்தங்களாக, இதை விட படிப்பதற்கு ஒரு நல்ல இடம் வேண்டியிருக்காது. ஒரு தடவை படிச்சா நூறு தடவை படிச்சா மாதிரி மனதில் பதிந்துவிடும். தோழிகளுடன் விளையாடுவதற்கும், நேரம் போவதே தெரியாமல் அரட்டை அடிப்பதிற்கும் தோதான இடமும் அதுவே. தனிமையும், இனிமையும் நிறைந்த அமைதியான இடம் அது. நாங்கள் சிறு வயதில் அதன் படிக்கட்டுகளை கூட விடாமல், ஒவ்வொரு படிக்கட்டுக்கும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று பெயர் வைத்து அங்கிருந்து கீழே குதித்து விளையாடுவோம்.
அக்னி நட்சத்திர வெயிற்காலங்களில், காலையில் துணி காய வைக்க, மதியம் வடாம் போட, சாயங்காலம் குழந்தைகள் விளையாட, இரவில் குடும்பத்தினருடன் வரிசையாக பாயில் சுகமாக படுத்துறங்க என்று மொட்டைமாடியிலேயே என்னேரமும் பொழுதைக் கழிப்போம். வெயில் இறங்கியதும் சில்லென்று தண்ணீர் தெளித்துவிட்டு இரவில் பாய் போட்டு படுத்தால் இன்றுள்ள குளிர்சாதன அறை எல்லாம் அதற்கு அப்புறம்தான். குளுமையான காற்று நம்மை வருட, விவிதபாரதியின் உங்கள் விருப்பம் தாலாட்ட, வானத்து கண் சிமிட்டும் நட்சத்திரங்களின் அழகை பார்த்து வியக்கும்போதே, இதமான நித்திரை ஆட்கொள்ள, இயற்கை சொர்க்கமே அதுதானோ?
நாங்கள் இருந்தது ஐந்து குடித்தனங்கள் கொண்ட வீட்டின் ஒரு போர்ஷனில். அதனால் அக்கம்பக்கத்தில் நிறைய நண்பர்கள் இருந்ததால் நேரம் போவதே தெரியாமல் எப்போதும் விளையாட்டுத்தான். மொட்டை மாடிக்கு மிக அருகில் இருந்த போர்ஷனில் டீச்சர் மாமி தனியாக குடித்தனம் இருந்தார். (பெயர் தெரியவில்லை, என் பாட்டி உட்பட எல்லோராலும் டீச்சர் என்றே அன்பாக அழைக்கப்பட்டார்). மாடியின் இடப்பக்கம் வேணி மாமி குடும்பம் இருந்தது. இருவரும் சுவாரஸ்யமானவர்கள். என் சிறுவயதிலேயே தன்னம்பிக்கை நிறைந்த இரு பெண்களை சந்தித்தேன்.
டீச்சர், குழந்தை பேறு இல்லை என்பதற்காக கணவரால் நிராகரிக்கப்பட்டவர். கணவர் மறுமணம் செய்த பின்பும் மனம் தளராமல், பள்ளி ஆசிரியை பணியை மேற்கொண்டு, ஓய்வு நேரங்களிலும் டியூஷன் எடுத்து, தைரியமாக யாருடைய தயவும் இன்றி வாழ்கையைத் தொடர்ந்தவர். என் சிறு வயதில் ஏன் அவருடன் யாருமே இல்லை என்று புரியாத கேள்விகள் எழுந்ததுண்டு. அவருடைய வைராக்கியமும், மன உறுதியும், தன்னம்பிக்கையும், சமூகத்தில் வாழ்ந்து காட்டும் துணிச்சலும் இப்போது பாரதியின் புதுமைப் பெண்ணாக அவரை நினைக்க வைக்கிறது.
வேணி மாமி, கணவர்/குழந்தை (பாஸ்கர் என்று ஒரு பையன்) என்று சிறிய குடும்பம். பார்க்க அழகாக இருப்பார். அவருக்கு ஜீரண சிக்கலோ என்னவோ அடிக்கடி ஏப்பம் விடும் பழக்கம் இருந்தது. எனக்கு அந்த சமயங்களில் அடக்க முடியாமல் சிரிப்பு வரும். அவருடைய போர்ஷனுக்கு நான் அடிக்கடி போவேன். அந்த சிறு போர்ஷனின் கூடத்தில் உள்ள அலமாரிகளில் அழகாக ப்ரவுன்ஷீட்டில் அட்டை போட்டு வரிசையாக எண் குறியிட்ட கதைப் புத்தகங்கள் நிறைக்கப் பட்டிருக்கும். என் மாதிரி புத்தகப் பிரியர்களுக்காக அவரால் நடத்தப்பட்ட வாடகை புத்தககம். ஒரு இருநூறு பக்க நோட்புக்கில் அழகாக கோடு கிழித்து அட்டவணை செய்திருப்பார். அதில் நம்முடைய பெயர், புத்தகப் பெயர், தேதி, குறிப்பிட்டு எடுத்து செல்ல 25 பைசா கட்டணம். என்னுடைய படிப்பறிவையும், பகுத்தறிவையும் மறைமுகமாக வளரச் செய்தவர் என்ற வகையில் அவரை என்றுமே மறக்க முடியாது.
மொட்டை மாடியை திறந்த வெளி அரங்கமாக மாற்றிய பெருமையும் எங்களுக்கு உண்டு. ஒரு வருடாந்திர விடுமுறையில், அனைத்து குடித்தனக்கார வாண்டுகளும் சேர்ந்து, டீச்சர் வீட்டு தாழ்வாரத்தை மேடையாகவும், அதை ஒட்டிய மொட்டை மாடியை அரங்கமாகவும் உருமாற்றி சரித்திர நாடகம் போட்டோம். டீச்சர் வெயிலை மறைப்பதற்காகப் போட்டிருந்த பச்சை நிற தட்டி எங்கள் மேடைக்குத் திரை. நாங்களே நோட்புக் அட்டையில் ஜிகினா பேப்பர் ஒட்டி தயார் செய்த கிரீடம், வாள், டீச்சர்/வேணி மாமி உதவியுடன் மெருகேற்றப்பட்ட கதை என்று எங்கள் நாடகம் களைக் கட்டியது. அனைத்து அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா எங்கள் பார்வையாளர்கள். எல்லோரும் மொட்டை மாடியில் ஒன்றாக அமர்ந்து ரசித்து, சிரித்து, கைத்தட்டியது கண்கொள்ளாக் காட்சி. அந்த மாண்புமிகு மொட்டை மாடியை என்னால் மறக்க முடியுமா, சொல்லுங்கள்?

இன்றும் மொட்டை மாடிக்கு செல்ல எனக்கு ஆசைதான். ஆனால் திரும்பும் இடங்களில் எல்லாம் ஆளுக்கொரு டிஷ் ஆண்டெனா வைத்திருக்க, கட்சி கொடி போல எந்த பக்கமும் துணிக் கொடிகள் பறக்க ஆளரவில்லாமல் அமைதியாய் காட்சியளிக்கிறது. பெரியவர்கள் எந்நேரமும் மெகா சீரியலில் லயித்திருக்க, சிறியவர்கள் கார்டூன், கணிணி விளையாட்டுக்கள் என்று அறைக்குள்ளேயே முடங்கியிருக்க, மொட்டை மாடி என்பது இன்றைய நாட்களில் அனைவருக்கும் சுவாரசியமில்லாமல் போனது.
ஒரு நாள் மாலைப் பொழுதில் என்னுடைய கடைக்குட்டியை துணைக்கு கூட்டிக்கொண்டு மொட்டை மாடியை சுகமா என்று விசாரிக்க சென்றேன். சிறு வயதில் சின்ன சின்ன விஷயங்களைக் கூட மிக்க இன்பமாக்கிய என் மொட்டை மாடி ஜீவனில்லாமல் மெளனமாக காட்சியளித்தது. என் கடைக்குட்டிக்கு ஆசையாக வானம், ஏரோப்ளேன், சுற்றிலும் பரந்த வீடுகள், வீதிகள், கோயில் கோபுரங்கள், நிலா, நட்சத்திரங்கள் எல்லாம் காண்பித்தேன். இருந்தும் அவன் சொன்னான், “ அம்மா, இங்கே யாருமே இல்லேம்மா, வாம்மா கீழே போலாம், எனக்கு போரடிக்குது”. என் கண்களின் ஓரம் ஈரம்.
********
பதிவு பிடித்திருந்தால் தமிழிஸில் பிரபலமாக்க இங்கே க்ளிக் செய்யவும்