K.B. யின் ரசிகையாக ….
Monday, May 2nd, 2011’இயக்குநர் சிகரம்’ கே. பாலச்சந்தர் ரசிகையாக அவருக்கு இந்த ஆண்டின் ‘தாதா சாஹப் பால்கே’ விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
அவரது படங்கள் எல்லாம் ‘Class’ ரகம். அவற்றை புரிந்து ரசிப்பதற்கு மெத்த அறிவும், புதுமைகளை வரவேற்கும் முற்போக்கான எண்ணங்களும் அவசியம். அவருடைய கதைகள் காலத்தின் மாற்றங்களை நமக்கு எடுத்துரைத்தன ; கதாநாயகர்கள் மாறுபட்டு சித்தரிக்கப்பட்டிருந்தார்கள் ; கதாநாயகிகள் முன்னிறுத்தப்பட்டு பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்கள் ; சிறு கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் கூட கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமானார்கள் ; பாடல்கள் உறுத்தாமல் மிகவும் இயல்பாக இருக்கும் ; முடிவுகள் எதிர்பாராததாய், புதுமையாய், வரவேற்கத்தக்கதாய், விவாதத்துக்குரியதாய் அமையும் ; இவை யாவும் அவரது படங்களின் சிறப்பு. அவர் இயக்கிய படங்கள் ‘திருக்குறள்’ போன்று எல்லா காலத்திற்கும் உகந்தவை.
திரு கே.பாலச்சந்தரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, அவரது கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள். அவ்வளவு பொருத்தமான, அறிவார்ந்த, தேர்ந்தெடுத்த சொற்களால் அமைந்த, நறுக்கு தெரித்தாற் போன்ற வசனங்கள். அவரது கதாநாயகிகள், அறிவில், அழகில், பண்பில், குணத்தில், திறமையில் உயர்ந்திருப்பதை வசனங்கள் உணர்த்தும். என்னுடைய இளம் வயதில், பேசத் தெரியாமல் திணறும் பல சந்தர்ப்பங்களில், திரு. K.B. சார் நமக்கும் வசனம் எழுதிக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றும். என்ன அருமையான, சிந்திக்க வைக்கும், முற்போக்கான வார்த்தை பிரவாகங்கள். உங்களைப் பாராட்ட உங்கள் வார்த்தைகளையே இரவலாக்குகிறேன் ;
‘அண்ணலே
ஒரு முறைக் கேட்டேன்
கேட்டதும் பரவசம் அடைந்தேன்,
பரம ரசிகை ஆகி விட்டேன்
அதென்ன, அப்படியொரு வார்த்தை ஜாலம் உங்கள் தமிழில்
அபூர்வமான இயக்குநர் சார், நீங்கள்.’
ஏக் துஜே கே லியே, மரோ சரித்ரா, நினைத்தாலே இனிக்கும், அக்னி சாட்சி, வறுமையின் நிறம் சிவப்பு, 47 நாட்கள், என்று என் இளமையை இனிமையாக்கிய படங்கள் என்றும் மறக்க முடியாதவை.
இன்றும் விஜய் டிவி-யில் வரும் ‘கே.பி-யின் பெட்டகத்திலிருந்து’ தொடர்கள் ‘கை அளவு மனசு’, ‘ப்ரேமி’ என்னை தொலைக்காட்சியின் முன் இழுத்து அமர வைக்கின்றன.
உங்களின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் சார்பாக, தேன் தமிழ் சொற்களால் அலங்கரிக்கப்பட்ட பூங்கொத்தை உங்களுக்கு மானசீகமாக சமர்ப்பிக்கிறேன.