என் அருமை அம்மா

” யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா”

டிசம்பர் 31, 2010  காலண்டரில் எனக்கு பிடிக்காத நாள். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

விடிந்தால் ஜனவரி 1, 2011,  புது வருடத்தின் முதல் நாள். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31ம் தேதி இரவு முழுவதும் தொலைக்காட்சிப் படங்கள், தொலைப்பேசி வாழ்த்துக்கள் என்று வீடே கலகலப்பாக இருக்கும். புது வருடத்திற்கு என்ன கோலம் போடலாம், என்ன ஸ்வீட் செய்யலாம், விசேஷமாக என்ன சமைக்கலாம், என்ற எண்ணங்கள் எதுவுமே தோன்றாமல் என் மனம் நிச்சலனமாய் இருந்தது.  ஆம், அந்த இரவு எங்கள் தொலைக்காட்சி மவுனிக்க, தெருக்களின் பட்டாசு சத்தம் கூட சோகத்தின் பின்னணியாக ஒலித்தது.

மூன்று மாதங்களாய் உடல் நலம் குன்றி மருத்துவ மனை யில் இருந்த என் அருமை அம்மா,  இருபத்தி ஒராம் நூற்றாண்டின் மருத்துவ வளர்ச்சிக்கும்,  பல சிறப்பு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கும் பலனின்றி, தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களை சுவாசித்து கொண்டிருந்தார்.

சிறு வயது முதல் பாலூட்டி, தூக்கம் விழித்து கண்ணும் கருத்து மாய் வளர்த்து, படிக்கும் காலங்களில் நேரத்திற்கு அமுதூட்டி, நாங்கள் நோய்வாய்பட்டால் மருந்துடன் பாசத்தையும் ஒரு படி அதிகமாய் கொடுத்து குணமாக்கி, நாங்கள்  கவலையுறும்போது கனிவான மொழி பேசி ,  சந்தோஷப்படும்போது எங்களுடன் சேர்ந்து குதூகலித்து முப்பொழுதும் எங்கள் நலனையே சிந்திக்கும் ஒரு ஜீவனை இழந்து கொண்டிருந்தோம்.

எங்கள் வீட்டு அன்பின் அமுதசுரபி பிரிந்து செல்வதை தடுக்க முடியாத இயலாமையில் கடவுள் மேல் முதன் முதலாய் கோவப்பட்டேன். எதற்காக இறப்பு என்ற ஒன்றை நம் மேல் திணித்தார்?  நல்லவர்களாய் வாழாதவர்களுக்கு மட்டும் இறப்பு என்றிருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும். உலகத்தில் எங்கும் சுபிக்‌ஷம் மட்டுமே நிறைந்திருக்கும்.

வருடத்தின் முதல் தேதியை பிள்ளைகள் சந்தோஷமாக கொண்டாடட்டும் என்று தன் சுவாசத்தின் இறுதி மூச்சில் கூட எங்களின் நலம் நினைத்தரோ,  அம்மா.   ஜனவரி 2ம் தேதி காலை மூன்று மணிக்கு சோகத்தின் உச்ச கட்டமாய் அம்மா எங்களைப் பிரிந்தார்.

என் அம்மா சிறந்த குணவதி. அன்பு ததும்பும் சாந்தமான முகத்திற்கு பொருத்தமாக என் தாத்தா அம்மாவிற்கு ‘சாந்தா’ என்று பெயர் சூட்டியிருந்தார். அம்மா மிக்க பொறுமை நிறைந்தவர். எங்களை சிறு வயது முதல் பாசத்தால் மட்டுமே நல் வழிப் படு த்தியவர். சிறு கடுஞ்சொல் கூட அவரது வாயில் உச்சரிக்கப்பட்டு கேட்டதில்லை நாங்கள்.  வீட்டு வேலைகள் அனைத்தையும் முகம் சிறிது கூட கோணாமல் செய்து முடிக்கும் அவரது திறமையும், வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள், எந்த நேரத்தில் வந்தாலும் வரவேற்று உபசரிக்கும் நற்குணமும், அப்பாவின் உள்ளமறிந்து உறுதுணையாக நடந்த நேர்த்தியும், பிள்ளைகளுக்கு பிடித்த உணவை பார்த்து பார்த்து சமைக்கும் பாசமும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூட பார்த்து வியக்கும் நற்குணமும் அமைந்தவர், என் அம்மா.

தாத்தா/பாட்டிக்கு அன்பானதொரு மகளாய், அப்பாவிற்கு நல்ல மனைவியாய், எங்களுக்கு பாசமிகு அம்மாவாய், மாமாவுக்கு பாசமான தங்கையாய், மாமிக்கு வெகுளியான நாத்தனாராய், சித்திகளுக்கு அன்பான அக்காளாய், பாட்டிக்கு பிடித்தமான மாற்றுப்பெண்ணாய், அத்தைகளுக்கு அரவணைக்கும் மன்னியாய், அத்திம்பேர்களுக்கும் மதிப்பிற்குரிய மன்னியாய், மாப்பிள்ளைக்கும் மருமகள்களுக்கும்  பாசமுள்ள குறை சொல்லாத மாமியாராய், பேரன் பேத்திகளுக்கு கொஞ்சி விளையாடும் பாட்டியாய், எல்லா உறவுகளிலும் நற்பெயர் பெற்றவர் என் அம்மா.

குடும்பத்தில் மட்டுமல்லாது, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூட மறைவாகவும் போற்றும் குணம் மிக்கவர்.

அம்மா,

பூக்களிலே நீ இதழ் விரிந்த தாமரை

கனிகளிலே நீ முத்தான மாதுளம்

மரங்களிலே விழுதுகள் நிறைந்த ஆலமரம்

இசைக்கருவிகளில் நீ இன்றியமையாத தம்புரா

காலங்களில் நீ உன்னதமான சூர்யோதயம்

பாடல்களில் நீ பாசமான தாலாட்டு

காற்றினிலே நீ இதமான தென்றல்

என்றும் எங்கள் இதயத்தின் துடிப்பு நீ.

அப்பா/அம்மா திருமணம் 1961ம் ஆண்டு நிகழ்ந்து 49 வருடங்கள் ஆதர்ச தம்பதியராக இருந்தனர்.  தன் மனதில் உள்ள பாசத்தை வெளிப் படுத்தி அப்பா எழுதிய கடிதம் எங்கள் நெஞ்சத்தை உருக்குவதாக இருந்தது. அந்த கடிதம் அம்மாவிற்கு அஞ்சலியாக என் வலைதளத்தில் அப்பாவுடைய கையெழுத்திலேயே இணைப்பதில் மிக்க பெருமை கொள்கிறேன்.

அம்மா உன் கண்களை இரு பார்வையில்லாதவர்களுக்கு தானம் செய்ததால், இன்னும் எங்களுடன் தான் இருக்கிறாய் அம்மா,  உன் கனிவான பார்வை எங்களை நினைக்குமா அம்மா?  அடுத்த பிறவி என்று இருக்குமாயின் எந்த உயிராகவாவது எங்களுடன் சேர்ந்துவிடுவாயா அம்மா? உன்னை அன்புடன் எதிர்பார்க்கிறேன்.

Tags: , , , , ,

7 Responses to “என் அருமை அம்மா”

  1. R Sathyamurthy Says:

    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற வாக்கிலேகூட அம்மாதான் முதன்மை வகிக்கிறாள். தாய்மை அன்பு என்பது
    எல்லா உயிரினங்களிலும் மேலோங்கி நிற்பதை பி.பி.சி. தொடரான Life பார்த்த்தில் தெரிந்த உண்மை.

    கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் “தாய்”. தாய்தான் நமக்கு முதலில் தெரிந்தவள். தாய் காட்டித்தான் நாம் தகப்பனை அறிவோம் என்று சொல்லியிருக்கிறார்.

    தாயின் அன்புக்கு ஈடு இல்லை. எனக்கு சாந்தா மாமி என்றாலும், இன்னொரு அம்மா என்றே எப்போதும் நினைக்கிறேன். நான் ஒவ்வொருமுறை சென்னை வந்து வெளிநாடு திரும்பும் பொழுதும் என்னை மிகவும் அன்பாக விசாரித்து, என் உடல் நலனை பேணும்படி அறிவுறுத்தும் அந்த அன்பு நெஞ்சம் கடந்த இருமுறைகள் நான் சென்னை வந்து திரும்பும்பொழுதும் என்னுடன் பேசும் நிலையில் கூட இல்லை.

    அவருடைய அன்பான ஆத்மா என்றும் நம்மை ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும். அவர் நினைவுகளால், அவர் எப்பொழுதும் நம்முடனேயே இருப்பார்.

    அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

    அவருடைய இறுதி காலத்தில் அவர் நலம் பெறவேண்டும் என்ற ஒரே உறுதியுடன் இரவு, பகல் பாராமல் அவரை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட நான் மாமா என்று அழைக்கும் நம் அப்பா ஒரு உயர்ந்த மனிதர். காதல் என்பதற்கு உண்மையான அர்த்தம் அவர் மூலம் தெரிந்து கொண்டேன்.

  2. Srikkanth Says:

    Simply great. If every husband and wife live like this, the life will be amazing. They set an example, all we need to follow them.

    Anbudan
    Srikkanth

  3. Indli.com Says:

    என் அருமை அம்மா | நினைவுகளின் அலையோசையில்……

    ” யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா” டிசம்பர் 31, 2010 காலண்டரில் எனக்கு பிடிக்காத நாள். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்….

  4. sundar Says:

    ரொம்ப அருமையான மனதை தொடும் கட்டுரை. இதிலிருந்து உங்கள் அம்மா மீது உங்களுக்கு உள்ள பாசமும் உங்கள் அம்மாவை பற்றியும் நன்றாக புரிகிறது. இதை உங்கள் அப்பாவின் கடிதமும் ஊர்ஜித படுத்துகிறது. அவரின் ஆத்மா இந்நேரம் திருவடி அடைந்திருக்கும். அவரின் ஆசி உங்களுக்கெல்லாம் எப்போதும் இருந்துகொண்டு இருக்கும்.

  5. Vijayasarathy R Says:

    போகும்போது நாம் எதையும் எடுத்துச் செல்வதில்லை. ஆனால் கண்டிப்பாக விட்டுப்போக வேண்டியது ஒன்று. அது பிறரிடத்தில் நம்மைப் பற்றிய நினைவுகள்.

    நினைவுகளே நாம் எவ்வாறாக வாழ்ந்தோம் என்பதை தெரியப்படுத்துகிறது. தெரியவரும்போது நாம் இருப்பதில்லை. கடவுளை நான் ஆச்சர்யத்துடன் பார்க்கிறேன்.

    உங்கள் அம்மாவின் நினைவுகளே அவர் உங்களுக்குக் கொடுத்துச் சென்ற வாழ்நாள் பரிசு. இதைவிட ஒரு பொக்கிஷம் வேறு உண்டோ?

    திரு. வெங்கடாச்சாரியின் கடிதம் நீண்ட நாள் திருமண பந்தத்தில் வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் எவ்வளவு பாசமிக்க உறவு என்பதின் இன்னொரு அடையாளமாகவே பார்க்கிறேன். நாள் செல்ல நாள் செல்ல எதுவும் கசக்கும், ஆனால் நம் கலாசாரத்தின் அடையாளாமாக கருதப்படும் திருமண உறவு என்றும் இனிக்கும் ஒன்று.

    நெகிழ்ச்சியான பதிவு. அவரின் ஆன்மா வேறோரு உறவின் வழியாக உங்கள் குடும்பத்தில் வந்தால் அது உங்களுக்கும் மகிழ்ச்சியே ஆயினும், யதார்த்தத்தில் அந்த ஆன்மா இறைவன் திருவடியை அடைந்துவிடுகிறது.

    இப்படிப்பட்ட கணவன் கிடைத்ததற்கும், பாசமிகு பிள்ளைகளை ஈன்றதற்கும் நிச்சயம் அந்த ஆன்மா சாந்தியடைந்திருக்கும்.

  6. T.P.ANAND Says:

    மிகவும் நெகிழ வைத்து பாசத்தின் உச்சத்தை காட்டிய பதிவு.

    பாசம், நேசம், பரிவு, பொருமை இவற்றின் மொத்த உருவம்தான் அம்மா.

    உங்கள் அம்மா ஆத்மா சாந்தி அடய கடவுளை ப்ரார்த்த்க்கிறேன்.

  7. V.BALAJI Says:

    மிகவும் நன்று.

    மிகையில்லை… அருணா.,

    எண்ணங்களின் ஆழம் மிக மிக அதிகம். உள்ளது உள்ள படி கூறுவது மிக கடினம். இந்தப் பதிவில் நம் அம்மாவைப் பற்றி, உன்னுடைய எண்ணங்களை கவிதை நயத்துடன், நம் ஆற்றாமையை நீ விவரித்தது புரிந்தும், நீ கேட்ட கேள்வி புரிந்தும்,என்னால் அந்த கேள்விக்கு விடை காண முடியவில்லை. முற்றுப்புள்ளி இல்லாத வாக்கியம் முழுமையடைவதில்லை என்று பல சமாதானங்கள் நாம் கூறிக்கொண்டாலும், சில பல முறண்பாடுகள் நிறைந்த நம் அனைவர் வாழ்க்கை, இன்பம்,துன்பம், சுகம் துக்கம், என மாறி மாறி வருவது என நம் மனதை நாமே தேற்றிக்கொண்டாலும், நாம் மிகவும் நேசித்த அம்மா, நம்மை விட்டு சென்று விட்டார் என்று என்னால் இந்த நிமிடம் வரை நம்ப இயலவில்லை. காலச்சக்கரம் ஒன்றே நம் அனைவருக்கும் மருந்தாகும்.

    கடவுளிடம் பக்தியை கற்றோம்..!,குருவிடம் வித்தையை கற்றோம்..!,தந்தையிடம் நேர்மை,வாழ்க்கை நெறிமுறை கற்றோம்..!, ஆனால் தாயிடம் மட்டும் எதையும் கற்கவில்லை…., பாசத்தை உணர்ந்தோம்…!ஆம்..உலகில் நாம் அனைவரும் பிறந்த நாள் முதல், தாயின் கடைசி நாள் வரை, பாசத்தை அனுபவிக்கிறோம்…!
    அம்மா…
    இந்த ஒரு சொல், நாம் எல்லாருடைய வாழ்க்கையிலும் சர்வ சாதாரணமாக அறியப்பட்ட ஒரு வார்த்தை. மதம்,மொழி,இனம்,நிறம்,கண்டம் என அனைத்தையும் கடந்து, உலகில் உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் ஒரு சொல். இதன் மகத்துவத் தத்துவதிலேயே இந்த உலகம் இயங்குகிறது. கடவுளைத் தேடித்தேடி மனிதன், கடைசியில் தன் தாயிடம், கடவுளைக் காண்கிறான். இருக்கும் பொழுது இதை அறியாத மனம், இழந்த பொழுது அழுது துடிக்கிறது….!

    எங்கள் அம்மா…அனைத்து உயிர்களிடமும் அன்பு கொண்டவர். எங்கள் ஐவரையும்(எங்கள் தந்தையையும் சேர்த்து)கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டவர். சிறு வயது முதல், நான் வசிகரிக்கப்பட்ட ஒரே முகம், அது என் தாயின் முகம்.அந்த ஒரு காரணமாகவே, என் மனைவின் முகத்தில், என் தாயின் சாயல் தெரிந்தால்,உடனே என்னால் அங்கீகரிக்கப்பட்டு, என் மனைவியானாள்.

    எல்லா பிள்ளைகளும்,தன் தாயைப்போற்றுவது இயற்கை. ஆனால், எல்லாக் கணவர்களும், தன் மனைவியைப் போற்றுவதில்லை.(விதி விலக்குகள் உண்டு).கணவன், மனைவிக்குள்ளே சண்டைகள் வருவது வழக்கமான ஒன்று. ஆனால் எங்கள் அம்மாவும்,அப்பாவும் சண்டைப்போட்டு நாங்கள் பார்த்ததே கிடையாது. காரணம், அப்பா எவ்வளவு கோபமாக பேசினாலும், அம்மா தன் அப்பாவித்தனத்தால் பதில் பேசாமலேயே மெளனமாக வென்றுவிடுவாள், அம்மாவின் மெளனத்திலும் ஒரு அர்த்தம்…!, சோகத்திலும் ஒரு அழகு…!சிரிப்பிலோ…இறைவன்…!

    இப்படி அம்மாவின் பல பிம்பங்கள் என் மனத்தில் நீங்காமல் நிலைக்கொண்டுள்ளதாலோ என்னவோ..நம் அம்மா, நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்று என்னால் நினைக்கமுடியவில்லை. அம்மா நம் அனைவரின் மனதிலும் வாழ்ந்து நம்மை நல்வழி நடத்துவார்….

    ப்ரியமுடன்

    பாலாஜி.

Leave a Reply

Subscribe to read posts on email

Enter your email address:

Delivered by FeedBurner