சிறந்த மெகா சீரியலிஸ்ட்
Friday, August 6th, 2010நம்ம ஊர் தொலைக்காட்சிகளின் முக்கிய நேர ஒளிபரப்பான மெகா சீரியல்களின் நீண்ட நாள் ரசிகரா நீங்கள் ! உங்களுக்காகவே ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. சன், கலைஞர், ஜெயா, ராஜ், விஜய், பொதிகை தொலைக்காட்சிகளில் பெரும்பான்மையான ஒளிபரப்பு நேரத்தை தன் வசம் வைத்திருக்கும் நிகழ்ச்சி “மெகா சீரியல்”. இந்த சீரியல்களை பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு வரும் வருடங்களில் ஒரு விருது சன் தொலைக்காட்சி நிலையம் சன் குடும்ப விருதுகள் வரிசையில் சேர்க்கப் படலாம். அந்த விருதைப் பெறுவதற்கு கடுமையான போட்டி இருக்கும். கால் இறுதி, அரை இறுதி, மறு வாய்ப்பு (வைல்ட் கார்டு சுற்று), கடைநிலை சுற்று, இறுதிக் கடைநிலை சுற்று வரை பயணிக்க வேண்டுமானால், இந்த பதிவு உங்களுக்கு அதற்காக தயாராவதற்கு உதவும்.
காலை 4 மணி நேரம் மாலை 6 மணி நேரம் என்று தொலைக்காட்சியின் தொடர் மெகா சீரியல்களில் பொழுது போக்குபவர்களுக்கும், புதிதாக இந்த தொடர்களை மனைவியுடன் வேறு வழியில்லாமல் பார்க்க தொடங்கியிருக்கும் கணவர்களுக்கும், கோயில்களை மறந்த பாட்டிமார்களுக்கும், விளம்பர இடைவேளையின் போது மட்டுமே வீட்டை கவனிக்கும் பெண்மணிகளுக்கும், இந்த விருது கண்டிப்பாக தரப்பட வேண்டும். ஆனால் இது மிக சுலபமாக கிடைக்கக்கூடிய விருதல்ல. இதைப் பெற கடின உழைப்பும் சில தனித்தன்மைகளும் அவசியம். அதற்கான ready reckoner ;
1. சிறந்த ஞாபகத் திறன் – பள்ளியில் படிக்கும் காலங்களில் பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ள மறந்திருக்கலாம். ஆனால் அரைமணி நேர இடைவெளியில் காலை 7 சீரியல் மாலை 7 சீரியல் ஒரு சேனலில் என்றால் வேறு வேறு சேனல்களில் வரும் சீரியல்கள் எண்ணிக்கையை மனதில் கொள்ளுங்கள். அவற்றின் கதை, கதாபாத்திரங்கள், அவர்களின் பெயர், உறவுமுறை என்று குழப்பமடையாமல் ஞாபகம் வைத்துக் கொள்ள அபார ஞாபக சக்தி வேண்டும். இது மிகவும் முக்கியமான தகுதி.
2. எதையும் தாங்கும் மனோ திடம் — பல வருடங்கள் இழுக்கும் மெகா சீரியலின் கதாநாயகியுடன் நீங்கள் பயணிக்க வேண்டியது சில வாரங்களோ, சில மாதங்களோ அல்ல. சில வருடங்கள் அவள் தினமும் எதிர் கொள்ளும் பல விதமான பிரச்சினைகள், மாமியார்/ கணவரின் கொடுமைகள், அலுவலகத்தில் திடீரென முளைக்கும் வில்லன்கள், ஓரகத்தி/நாத்தனார் வஞ்சனைகள் என்று மனதளவில் அவற்றை ஏற்றுக்கொள்ள, கண்ணீர் விட தயாராக எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
3. பொறுமை / சகிப்புத்தன்மை – இவை இல்லாவிட்டால் மெகா சீரியல் பார்வையாளராய் இருக்க முடியாது. மெகா சீரியலின் ஒவ்வொரு எபிசோடிலும் இது சோதிக்கப்படும். கதாநாயகி பஸ்ஸில் பயணிக்கும்போது விபத்து நேர்ந்து அம்னீஷியாவில் தன் குடும்பத்தை மறந்து அவரை காப்பாற்றிய வேறு ஒரு குடும்பத்துடன் தங்குவார். அவரது கணவர் அதே ஏரியாவில் வந்து தேடும் போது கதாநாயகி தெருவில் நடந்து போக அவர் காரிலிருந்து இறங்க ‘தொடரும்’ போடப்படும். அடுத்த நாள் அவர் தன் மனைவியை கண்டுபிடித்து சேர்ந்து விடுவார் என்று தானே நினைத்தீர்கள். அதுதான் இல்லை, அவர் காரிலிருந்து இறங்கும்போது சரியாக ஒரு லாரி வந்து இருவரையும் பார்க்க முடியாமல் மறைத்துவிடும். இப்படியாக செல்லும் கதைக்கு எவ்வளவு பொறுமை/சகிப்புத்தன்மை வேண்டும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
4. திடுக்கிடும் திருப்பங்கள் – கதையில் சுவாரசியத்தை கூட்டுவதற்காக இயக்குநர் தினத் திருப்பங்கள், வாரத்திருப்பங்கள் என்று எதிர்பாராத சஸ்பென்ஸ்களை கையாள்வார். எவ்வளவு சின்ன சின்ன சுவாரசியங்கள் இருக்கிறதோ அந்த அளவு TRP உயரும் என்று நினைத்து உங்கள் இரத்த அழுத்தத்தை பரிட்சிப்பார். அதை தாங்கக் கூடிய மன வலிமை உங்களுக்கு வேண்டிய ஒன்று.
5. கதாபாத்திரங்களும்/நடிகர்களும்-- சில கதாபாத்திரங்கள் பாதியிலேயே காணாமல் போகலாம், திடீரென தோன்றலாம். இவருக்கு பதில் இனி என்று வேறு ஒருவர் மாறலாம். கதாநாயகி, நிஜ வாழ்க்கையில் குழந்தை பெற்று திரும்ப வரும் வரை, அவரின் கதாபாத்திரத்தை அமெரிக்காவுக்கு அனுப்பி வேறு கிளைக்கதைகளை ஆரம்பிக்கலாம். எல்லாவற்றிற்கும் எதிர் கேள்வி கேட்காமல் ஒத்துழைத்துப் பார்க்கும் நபராக உங்களை மாற்றிக் கொள்வது உத்தமம்.
6. எண்ணிலடங்கா உறவுகள்– நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு கதாபாத்திரங்களின் உறவுகள் இருக்கும். உதாரணத்திற்கு, கணவனின் இரண்டாவது மனைவியின் தங்கை புருஷனின் தம்பியின் நண்பனைப் போல. அவற்றை ஞாபகம் வைத்து கதையை பின் தொடர கூர்மையான அறிவு மிக முக்கியம். இந்த உறவுகளை வைத்து ஒரு சார்ட் வரைந்து கொள்வது உங்களுக்கு கைகொடுக்கும்.
7. திட்டமிடுதல் -- சீரியல் வரும் நேரங்களில் முக்கியமான திருமண வரவேற்பு இருக்கலாம். அலுவலக வேலை இருக்கலாம். விருந்தினர் வரலாம். பிள்ளைகளுக்கு தேர்வுகள் வரலாம். மின் தடை ஏற்படலாம். முக்கியமான தொலைபேசி அழைப்பு வரலாம். குழந்தை அழலாம். பக்கத்து வீட்டு மாமா நேரம் காலம் தெரியாமல் ரம்பமாக அறுக்கலாம். ரிமோட்டுக்கு கிரிக்கெட் காலங்களில் போட்டி வரலாம்.
இவற்றையெல்லாம் சமாளித்து, முன்கூட்டியே திட்டமிட்டு, பதிவு செய்து விடாமல் பார்த்து சாதனைப் படைக்க தயாராகுங்கள். பரிசு உங்களுக்கே!