தல(லை) நகரம்

January 24th, 2012

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தில்லு முல்லு’ படத்தில் பெண்கள் கல்லூரி பற்றிய புகழ் பெற்ற வசனம் நினைவிருக்கிறதா?  “உனக்கு தெரிஞ்ச நாலு லேடிஸ் காலெஜ் பேர சொல்லு” “குயின் மேரிஸ், ஸ்டெல்லா மேரிஸ், எத்திராஜ், எஸ்.ஐ.இ.டி.”  இந்த லிஸ்டின் நான்காவது கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்து முடித்ததும், சின்ன கம்பெனிகளில் கணக்கர் வேலை பார்த்தேன்.  சொற்ப சம்பளத்திற்கு அடிமை போல் வேலை வாங்கும் அலுவலகங்கள் அவை.

எப்படியாவது நல்ல வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு வங்கி பணிக்காக நடத்தப்படும் தேர்வு, மத்திய அரசு பணிக்கானத் தேர்வு என்று படையெடுத்ததில் மத்திய அரசு பணித் தேர்வில் வெற்றி பெற்றேன்.  அந்த பணிக்கான நியமனக் கடிதத்தை தபாலில் பெற்றதும், சந்தோஷத்துடன் நான் இதுவரை யோசிக்காத புது கவலையும் தொற்றிக்கொண்டது. வேலைக்கான பணியிடம் தல(லை) நகர், புது தில்லி.

தனியாக எப்படி புது நகரத்தில் தங்கி வேலை பார்ப்பது என்று மிகவும் மலைப்பாக இருந்தது. ஒரிரு நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தில், அம்மா/அப்பா சகிதமாக தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி வேலையில் சேர்ந்தேன். டில்லி அலுவலகத்தில் என்னை போல வேலையில் இருக்கும் பல இளைஞர்/இளைஞிகளை பார்த்ததும் புதுத் தெம்பு வந்தது. டில்லியை ஒர் அத்வான காடாக நினைத்து, எனக்கு தேவையான எல்லா பொருட்களையும் சென்னையிலிருந்து எடுத்துச் சென்றிருந்தேன்.

அப்பாவும், நானும் முதல் நாள் அலுவலகத்துக்கு ஆட்டோவில் சென்றோம். அப்பா ஏற்கெனவே அவருடைய அலுவலக வேலையாக டில்லிக்கு வந்திருந்ததால் கொஞ்சம் ஹிந்தி தெரிந்து வைத்திருந்தார். ஆட்டோ ஓட்டுநரிடம் “சீதா ஜாவோ” (“நேராக போ” என்று அர்த்தம்) என்று அப்பா சொல்ல அவன் ‘அச்சா ஜி’ என்றான்.
இதுதான் நான் கற்றுக் கொண்ட முதல் இரண்டு ஹிந்தி வார்த்தைகள்.

டில்லி, என்னை மிகவும் ஈர்த்தது. நாங்கள் தங்கியிருந்த ‘லஷ்மிபாய் நகர்’ அடுக்குமனை குடியிருப்பு, அதில் எங்களுக்கு (கலைச்செல்வி, நான்) ஒர் அறையை வாடகைக்கு விட்டிருந்த தமிழரசி குடும்பத்தினர், ஒன்பது அடுக்குகளைக் கொண்ட அலுவலகம், குறித்த நேரத்திற்கு தவறாமல் வந்து சொகுசாக பயணம் செய்விக்கும் சார்ட்டர் பேருந்து, வாரக் கடைசியில் சலிக்கும் வரை ஷாப்பிங் செய்ய சரோஜினி மார்க்கெட், சாந்தினி சவுக், கரோல் பாக், என்று விதவிதமான இடங்கள், என்று என் ஆரம்ப நாட்களை மிக்க இனிமையாக்கியது.

புது டில்லி எனக்கு நிறைய புதிய அனுபவங்களைக் கொடுத்தது. வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. நிறைய நண்பர்களைக் கொடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக என் வாழ்க்கை துணையை எனக்கு அறிமுகப்படுத்தியது. டில்லியில் நான் சந்தித்த ஒவ்வொரு நபரும் என்னால் மறக்க முடியாத அளவுக்கு என் எண்ணங்களில் இடம் பிடித்துள்ளனர். எனக்கு தள்ளாமையான காலங்களில் அவர்கள் பெயர் எனக்கு மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பதிவு.

டில்லி என்றதும் முதலில் என் நினைவுக்கு வருவது சுகந்தி மாமி. அவர் பாதுகாப்பு அமைச்சகத்தில் முக்கிய அதிகாரிக்கு காரியதரிசியாக இருந்தார். அவர் ஏனோ கல்யாணம் செய்யாமல் தனியாக இருந்தார். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த குவார்ட்டர்ஸ் மிகப் பெரிது. அதில் நான், ராஜி என்ற ராஜேஸ்வரி ஷரத், சச்சு என்ற சரஸ்வதி மூவரும் வாடகை விருந்தாளிகளாக (Paying Guest) இருந்தோம். சுகந்தி மாமி ரொம்பவும் டிஸிப்பிளிண்ட். காலை 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து அபார்ட்மெண்ட் எதிரில் உள்ள பூங்காவில் நடை பயிற்சி செய்வார். பின்னர் காபியுடன் திங்கள் சிவன் பாட்டு, செவ்வாய் முருகர் பாட்டு, புதன் விநாயகர் பாட்டு, வியாழன் ராகேவேந்திரர் பாட்டு, வெள்ளி அம்மன் பாட்டு, சனி அன்று விஷ்ணு சஹஸ்ரநாமம், ஞாயிறு ஆஞ்சநேயர் பாட்டு என்று டேப் ரிகார்டரில் நாள் தவறாமல் போட்டு எங்களை பக்தி வெள்ளத்தில் ஆழ்த்துவார். அவர் அலுவலகத்திற்கு தயார் என்றால் கடிகாரம் ஏழரை மணி காட்டுகிறது என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். அந்த அளவு நேரம் பின்பற்றுபவர். மாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு வருவது, எட்டு மணிக்கு இரவு சாப்பாடு, ஒன்பது மணிக்கு தூக்கம் என்று எங்களையும் தன்னை பின்பற்ற வைத்தவர். அவருக்கு நாங்கள் கொடுத்த தொகை வெறும் ரூபாய் முன்னூறு மட்டும் தான். அதைக் கூட கையில் வாங்காமல் பூஜை அலமாரியில் வைக்க சொல்வார். ஆனால் நாங்கள் எங்கள் குடும்பத்தை பிரிந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஒரு குடும்ப சூழ்நிலையில் மகிழ்ச்சியாக இருந்ததற்கு இன்னும் அதிமாக கொடுத்திருக்கலாமோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது. டில்லியில் நிறைய மகளிர் தங்கும் ஹாஸ்டல்கள் இருந்தாலும் இவருடன் இருந்தது மனதில் எப்போதும் பசுமையாக இருக்கிறது.இப்போது அவர் பணிஓய்வு பெற்றிருப்பார். அவருக்கு ஜனக்புரியில் ஒரு சொந்த வீடு இருந்தது. அங்குதான் என்றும் சுறுசுறுப்பாக, மற்றவர்களுக்கு உதவியாக இருப்பார். அவரது ஜனக்புரி விலாசத்தை எப்படியாவது கண்டறிந்து அவரை மறுபடியும் சந்திக்கும் ஆவல் இன்றும் எனக்கு உள்ளது.

ராஜி என்ற ராஜேஸ்வரி மஹாராஷ்டிரத்திலிருந்து வந்திருந்தாள். கல்யாணத்திற்கு பின் அரசாங்க வேலை கிடைத்ததை விட மனமில்லாமல் டில்லியில் இருந்து கொண்டு நினைவு முழுக்க பூனாவிலிருக்கும் தன் கணவரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பாள். எங்கள் எல்லோரையும் விட நன்றாக சமைப்பாள். அவளிடமிருந்துதான் நான் சப்பாத்தி வட்டமாக இட கற்றுக்கொண்டேன். பூனாவில் உன் அன்புக் கணவர் ஷரத்துடனுடனும் குழந்தைகளுடனும் நலமாக இருக்கிறாயா என் இனிய சிநேகிதியே?

சச்சு என்ற சரஸ்வதி பேருக்கு நேர்மாறான மாடர்ன் விரும்பி. நிறைய ஆங்கில புத்தகங்கள் படிப்பாள். ஸ்டைலாக டிரெஸ் பண்ணுவாள். நிறைய ஜோக்ஸ் சொல்வாள். நானும் அவளும் ஷாப்பிங் ஒன்றாக போவோம். உடைகளை மாற்றி அணிந்து கொள்வோம். இரவில் நேரம் போவதே தெரியாமல் அரட்டை அடிப்போம். நிறைய புது எண்ணங்களை பகிர்ந்து கொள்வாள். இன்று காலத்தின் ஒட்டத்தில் என்னை ஏன் மறந்தாய் என் அருமையான தோழியே?

நாங்கள் மூன்று பேரும் சேர்ந்தால் எப்போதும் சிரிப்புத்தான். எதற்கு என்றே தெரியாமல் சிரிப்போம். கடமைகளின் அழுத்தம் இல்லாத இனிமையான தருணங்கள் அவை. எந்த கவலையும் இல்லாத சுதந்திரமான நாட்கள். என் வாழ்கையின் பொற்காலம் என்றே எனக்கு எப்போதும் தோன்றும்.

டில்லியில் மறக்க முடியாத நண்பர்கள் வரிசை மிகப் பெரிது. அதில் என்னுடன் பணியாற்றிய ஆலிஸ், கலா, விஜி மூவரும் சேர்ந்து கழித்த பொழுதுகள் என் கல்லூரி வாழ்க்கையை மீண்டும் நினைவு படுத்துவது. என்னால் மறக்க முடியாத சில முகங்கள், நான் முதலில் சேர்ந்த பிரிவின் Budget Section Officer சிரித்த முகமாகவே இருக்கும் சக்சேனா, எனக்கு வேலையை கற்றுக் கொள்ள உதவிய பினிதா குஹா பெங்காலி மேடம், மிகவும் பொறுமையாக எந்த உதவியும் செய்யும் பரத்வாஜ், மலையாள நண்பர் சுரேஷ், Administration Department-ல் இருந்த என் தோழிகள் ரூபி (பஞ்சாபி பெண் ஆனதால் மிகவும் அழகாக இருப்பாள்), இன்னொரு விஜி, தமிழ் சங்கம் நடத்திய நண்பர்கள், என்று ஏராளமானோர் மறக்க முடியாதவர்களானார்கள். அரை மனதோடு டில்லி வேலையை ஏற்றுக் கொள்ள சென்ற எனக்கு, எங்கள் அலுவலகத்தில் தமிழ் சங்க நண்பர்கள் நடத்திய கையெழுத்து பிரதியில் எழுதும் அளவிற்கு பிராபல்யம் கிடைத்தது. டில்லி என்றுமே எனக்கு ‘பஹுத் அச்சா’ தான்.

எனக்கு டில்லியை பிடித்தது போல, டில்லிக்கும் என்னை பிடித்தது. அலுவலகத்தில் உத்யோக உயர்வுகள், இட மாற்றங்கள், மட்டுமன்றி என் வாழ்கை துணையையும் சேர வைத்தது. டில்லி பார்லிமெண்ட் பக்கத்தில் உள்ள ஆகாஷ் வாணி பவன் என் அடுத்த உத்யோக ஸ்தலம். சேவா பவன் அளவிற்கு இல்லையென்றாலும், எங்கள் ஆபிஸிற்கு பக்கத்து தெருவில் அமோகமாக விற்பனையாகும் ‘மசாலா டீ’ எல்லாவற்றையும் சரிகட்டியது. அங்கு கிடைக்கும் தேநீரின் ருசிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. எப்போதும் கூட்டம் களைக்கட்டும்.

அடுத்த கட்டமாக இந்தியன் ஏர்லைன்ஸ் பணி சென்னையில் கிடைத்தாலும், ஆத்துக்காரர் டில்லியில் இருந்ததால் மீண்டும் டில்லி என்னை அழைத்தது. நாங்கள் குடியிருந்த முனிர்க்கா, கல்காஜி, அலக்நந்தா எல்லாமே மிக்க அழகான இடங்கள். அலுவலகம் இருந்த சப்ஃதர்ஜங் ஏர்போர்ட் எதிரில் மிகவும் அழகான சாலை ஒன்று உண்டு. அடர்ந்த மரங்களிலிருந்து உதிர்ந்த சருகுகள் சாலையின் இருபுறமும் நிறைந்திருக்க, அதில் காலையும் மாலையும் நடக்க நான் என்ன தவம் செய்திருந்தேனோ?

டில்லியில் நான் சந்தித்த எல்லாரும் மிக்க நல்லவர்களாக, இனிய நண்பர்களாக, என் முன்னேற்றத்திற்கு துணை புரிபவர்களாக இருந்ததே எனக்கு டில்லியை பிடித்ததிற்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். நான் டில்லியில் முதன் முதல் இந்தியன் ஏர்லைன்ஸில் பணியில் சேர்ந்தபோது என்னுடைய மேலதிகாரி திரு.ராகவன், என்னுடன் பணியாற்றிய மித்தல், பியூன் பிரசாத், ரேணு, ரத்தன், கணேஷ், வினிதா மேடம், லலிதா, சந்தோஷ், இன்னும் நிறைய பேர்களை என்றுமே மறக்க முடியாது.

டில்லியின் பனி படர்ந்த குளிர் காலங்கள், தினமும் பாட்டுடன் பயணிக்கும் சொகுசான சார்ட்டர்ட் பஸ் பயணங்கள், சூடான மசாலா டீ, எங்கு போனாலும் கிடைக்கும் காலா நமக் சேர்த்த ஆரோக்கியமான காய்கறி ஜூஸ், காய்/கனி சாலட், எங்கள் குடியிருப்புக்கு அருகில் இருந்த அழகான சஞ்சய் காந்தி பூங்கா, லோதி ரோடில் இருந்த மிக நீளமான பூங்கா (அந்த நாள் கனவுக்கன்னி வைஜயந்தி மாலா இங்கு வேகமாக நடைப்பயிற்சி செய்ய பார்த்திருக்கிறோம்), அமைதியான ராமர் கோவில், ஆர்.கே.புரத்தில் இருந்த பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில், என்று எனக்கு பிடித்தமானவை இன்னும் நிறைய.

ஏழு வருடங்கள் டில்லி வாசம் முடிந்து, நம்ம ஊருக்கு கிளம்பியபோது, டாக்ஸியில் ஏர்போர்ட் செல்லும் வரை மனம் பாரமாகவும், கண்கள் ஈரமாகவும் இருந்தது. சென்னையை விட்டு வேறு ஊருக்கு செல்லும்போது அந்த உணர்வுகள் இருந்ததில்லை.
I MISS YOU, DELHI.

–அருணா சத்தியமூர்த்தி

Subscribe to read posts on email

Enter your email address:

Delivered by FeedBurner